நள்ளிரவு காற்று...

விஷ்ணுபுரம் சரவணன்

Wednesday, December 19, 2012

பட்டிக்காட்டான் போஸ்டரைப் பார்ப்பதைப் போல...

எனது சிறுவயது முதலே ’போஸ்டர் ‘ வியந்து பார்க்கும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. அதிலும் சினிமா தொடர்பான போஸ்டர் என்றால் கேட்கவே வேண்டாம். படிக்கும்போது அருகிலுள்ள இரவாஞ்சேரி அல்ஹம்பரா தியேட்டரில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை படம் மாற்றுவார்கள். அதாவது ஒருநாள் விட்டு ஒருநாள் புதுப்போஸ்டர் ஒட்டுவார்கள். பள்ளிக்கூடம் செல்லும் வழியிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். இருந்தாலும் போஸ்டர் பார்க்கும் ஆவல் வீட்டை விட்டு கிளம்பும்போதே துவங்கிவிடும். எப்போதும் தியேட்டர் பெயர் மற்றும் யார் யார் நடித்த படம் என்ற தகவல்கள் மட்டுமே அச்சடித்திருக்கிற போஸ்டர் மட்டுமே அங்கு ஒட்டுவார்கள். [ரோஸ்,பச்சை,நீலம் என ஒரே வண்ணத்தில் கருப்பு நிற எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும்] அநேகமாக நான்காவது ஐந்தாவது ரிலிஸ் என்று சொல்லுவார்களே அந்தளவு வெளியாகி கிட்டத்தட்ட ஒருவருடம் ஆன பழைய படங்களே வரும். அதிசயமாக கொஞ்சம் புதுப்படம் [வெளியாகி 4 மாதங்களில் ] வந்தால் நடிகர்கள் முகம் போட்ட போஸ்டர் ஒட்டுவார்கள். அன்றுமுழுவதும் வகுப்பில் அந்த பேச்சாகத் தானிருக்கும். விஜயகாந்த் படங்கள் அப்போது நிறைய நாட்கள் ஓடும் அதனால் அவர் நடித்த படம் என்றால் நிச்சயம் முகப்பட போஸ்டர்தான். ஓரத்தில் செந்திலை அடிப்பது போல கவுண்டமணி படம் இருக்கும். விஜயகாந்தை விட அதிக நேரம் இந்த இருவரையும்தான் பார்த்து சிரித்து வருவோம். எங்கள் பள்ளியருகே முகப்பட போஸ்டர் ஒட்டாத படங்களுக்குகூட இரவாஞ்சேரி கறிக்கடையருகே கட்டாயம் ஒட்டியிருப்பார்கள். யாரிடமாவது கெஞ்சி கூத்தாடி சைக்கிளில் ஒட்டிக்கொண்டு அந்த போஸ்டரைப் பார்க்கபோயிருக்கிறேன். கடைத்தெருவில் ஒட்டப்படும் போஸ்டரைப் பார்ப்பதற்காகவே அம்மாவிடம் இரவாஞ்சேரியில் ஏதாவது வாங்க வேண்டுமா.. போகட்டுமா என்று நச்சரித்திருக்கிறேன். என்னை சிறுவயதிலிருந்து நிறையபேர் சினிமாவுக்கு தொடர்ந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். போஸ்டரில் இருக்கும் காட்சி எப்போது திரையில் வரும் என்பதை கண்டுபிடிப்பதை ஒரு விளையாட்டாகவே வைத்திருந்தேன். திருவீழிமிழலையில் அண்ணனுக்கு தெரிந்த ஒருத்தரின் நண்பர் தியேட்டரில் போஸ்டர் ஒட்டுபவர் அவர் ஒருநாள் எனக்கு ஒரு போஸ்டர் கொடுத்தார். ’நினைவே ஒரு சங்கீதம்’ பட போஸ்டர். விஜயகாந்த், ராதா, கவுண்டமணி, ஸ்ரீவித்யா ஆகியோர் இருக்கும் போஸ்டர். ரொம்ப நாள் அதைப் பத்திரப்படுத்தி யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தேன். எப்போது அதை தொலைத்தேன் என்று நினைவில்லை. அப்போதெல்லாம் போஸ்டரைப் பார்க்கும்போது தவறாமல் நினைவுக்கு வரும் விஷயம் இதை எப்போது ஒட்டுவார்கள் என்பதுதான். ஒருநாள் விடியற்காலையில் வந்து பார்த்தபோது புதிதாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. போஸ்டர் ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது பார்க்கவேண்டும் என்பது அப்போது பெரும் கனவாக இருந்தது. அந்த கனவு நிறைவேற கிட்டத்தட்ட பத்தாண்டுகளாயிற்று. சைக்கிளில் தனியாக இரவுக்காட்சி பார்க்குமளவு வளர்ந்த நாளொன்றில் இரவுக் காட்சி படம் என்னை தூங்க வைத்துவிட்டது. நிச்சயமாக அது பிரபு நடித்த படமாகத்தான் இருக்கவேண்டும். நான் தூங்கிய படங்களில் பல பிரபு நடித்தது. என்னை ஒருவர் எழுப்பிவிட்டு வீட்டுப்போகச் சொன்னார். அவர் என்னுடன் எந்த ஊர் என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்து அவரின் சைக்கிளை எடுத்தபோது அவர் சைக்கிள் கேரியரில் பசை நிரம்பிய வாளி கட்டியிருந்த்து. வாளியை கட்டிய கயிற்றுடன் இணைத்திருந்த கயிற்றில் போஸ்டர்கள் சுட்டி வைக்கப்பட்டியிருந்தன. ஹேண்ட்பாரில் பெரிய பை தொங்கியது. உற்சாகத்தோடு இருவரும் சைக்கிள் மிதிக்க ஆரம்பித்தோம். தர்பார் ஹோட்டலில் டீ வாங்கிகொடுத்தார். அந்த ஹோட்டலுக்கு எதிரே ஒரு போஸ்டர் ஒட்டி ஆரம்பித்தார். பாலத்துக்கட்டையில் பேருந்து நிறுத்தத்தில் என்று ஐந்தாறு இடஙகளில் ஒட்டினார். நான் சிறுவயது பிரமிப்பு கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கள் ஊருக்குச் செல்லுவதற்கு சிறிதுதூரம் முன்னரே அருகே வடுகர்பாளையம் செல்லும் பிரிவில் “பத்திரமா போ” என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டார். உற்சாகமாக சைக்கிளை மிதித்து வீடு வந்தேன். நால்போஸ்ட் என்று சொல்லும் இருட்டான பகுதியினைக்கடக்கும்போது மனதிற்குள் பயமாக இருக்கும். அன்று பயம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அன்றிரவு வெகுநேரம் தூக்கம்வரவில்லை. ஒருவருடம் ஊரில் சின்னதாக கடை வைத்திருந்தேன். பகலில் கடை முழுவதும் நண்பர்களால் நிரம்பி, கேலியும் கிண்டலும் சண்டையுமாக என் ஆயுளில் என்றும் மறக்கவிரும்பாத நாட்கள் அவை. அந்த வருடம் முழுவதும் ஒருநாள் விட்டு ஒருநாள் படம் பார்த்திருக்கிறோம். பகல் முழுக்க பேசியபிறகும் கடையைப் பூட்டியபிறகு பேருந்து நிறுத்தத்தில் ஒருமணி வரை பேச்சு நீளும். அப்படி நீண்ட ஒருநாளில் இரவாஞ்சேரி இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் நண்பனின் திருமண வாழ்த்து போஸ்டர் ஒட்டவந்தார்கள். எங்களுடன் பேசிவிட்டு பேருந்து நிலையத்திலேயே ஒரு போஸ்டர் ஒட்டிவிட்டு சென்றவர்கள் பத்துபதினைந்து போஸ்டர்களை மறந்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அதை எங்கள் நண்பர்களில் ஒருவன் எடுத்து ஒளியவைத்துவிட்டான். அவர்கள் சிறிதுநேரம் கழித்து போஸ்டரை தேடிக்கொண்டு வந்து கேட்டபோது நாங்கள் பார்க்கவேயில்லை என்று கூட்டமாய் கூட்டுப்பொய் சொன்னோம். அந்த போஸ்டர் எந்த வித்த்திலும் எங்களுக்கு பயன்படப்போவதில்லை. ஆனாலும் கூட்டுப்பொய்யை சொன்னோம். அவர்கள் நம்பியும் நம்பாமலும் சென்றுவிட்டனர்.
இப்போதும் ஏதாவது நிகழ்ச்சி, ஆர்ப்பாட்டம் என்று தோழர்களோடு திட்டமிடுகையில் போஸ்டர் போடனும் என்று வரும் குரல் என்னுடையதாகதான் இருக்கும். தோழர். பொதியவெற்பன் அடிக்கடி சொல்லுவது.. அவர் நிகழ்ச்சி நடத்தும்போது போஸ்டர் ஒட்டுபவரோடு கூடவே போய் எல்லா போஸ்டரையும் ஒட்டவைத்து அவரின் கூலியோடு, சிறப்பு மருந்தையும் வாங்கிதருவேன் என்பார். அதற்கு காரணம் நாமலே போஸ்டர் ஒட்டினால் தொழில்ரீதியாக ஒட்டுபவர்கள் அதன்மேல் ஒட்டிவிடுவார்கள். அவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்தால் பாதிதான் ஒட்டுவார்கள் என்பார். சென்ற ஆண்டு பரமக்குடியில் தலித்களை சுட்டுக்கொன்றதற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை சந்திரா, கம்பீரன், கவின்மலர் ஆகியரோடு ஒருங்கிணைத்த போது பரமகுடி துப்பாக்கி சூட்டில் சுடப்பட்டவரின் உடலை இரண்டு காவலர்கள் ஆளுக்கொரு கையையும் இன்னும் இருவர் ஆளுக்கொரு காலைப் பிடித்து தூக்கி வரும் புகைப்படத்தை போஸ்டரில் போட்டு அடித்துக்கொடுக்க எந்த அச்சகமும் முன்வரவில்லை. இறுதியில் ஒரு கட்சி அச்சகத்தில் அடித்தோம். அதை ஒட்டுவதற்குகூட எவரும் வரமறுத்தார்கள். அந்நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் உதவினார்கள். ஆனாலும் அது முழுமையாக ஒட்டப்படவில்லை. இன்றைக்கும் கொல்லப்பட்ட தலித் படம் போட்டு போஸ்டர் கூட ஒட்ட முடியாத இச்சமுகத்தில் தலித் தலைவர்கள் எப்படி கட்சியை கட்டியமைத்தார்களோ என்பதுதான் அந்த வாரம் முழுமைக்கான பேச்சாக இருந்தது. பாச்சரப்பாளையத்தில் ஒட்டிய ஒரு போஸ்டர் மீதான வன்மத்தில் அந்த கிராமத்தில் எட்டு வீடுகள் தீக்கு இரையாகியதை நேரில் பார்த்தபோது உடைந்தே போனோம். சாதி வன்மத்தை காட்டுவதற்கு அம்பேகர் சிலை மீது போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். இப்போது தர்மபுரி வன்முறைக்கான நிகழ்ச்சிக்காக போஸ்டர் போட ஏற்பாடாகி முடியாமல் போனது. சிறுவயது முதலே போஸ்டருக்கும் எனக்குமான உறவு தொடர்ந்து வருகிறது என்றாலும் அந்த உறவின் பெயர் மாறியிருப்பதை உண்ர்கிறேன்.

Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 11:04 AM 2 COMMENTS

Tuesday, February 21, 2012

‘சி.பி.ஐ விசாரணைக்குக் குரலுயர்த்துவோம்’

நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என நீதிமன்றம் பலமுறை கேட்டதற்கும் கண்டித்தற்கும் பதில் கூறுமுகமாக, மருத்துவப் பரிசோதனையில் எந்த ஆதாரங்களும் இல்லையென்றும் எனவே பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படவில்லை என்றும் டி.ஜி.பி. ராமானுஜமும் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலும் சொல்லியிருக்கிறார்கள். நவம்பர் 22 ஆம் தேதி காவல்துறை மிருகங்களால் வன்புணரப்பட்ட பெண்கள் மிகச்சரியாக ஒருவாரத்திற்குப் பின்பு நவ.29 ஆம் நாள் தான் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட உடல் அதன் இயல்புநிலைக்குத் திரும்பியபின்பு ஆதாரங்கள் எப்படிக் கிடைக்கும்?

நவ.26 ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண்கள், இருளர் அமைப்பினர் எல்லோருடனும் சென்று தோழர்.கல்யாணி விழுப்புரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் நீ. பாஸ்கரன் ஐ.பி.எஸ் புகாரைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதாகவும் வாக்களித்து பாதிக்கப்பட்ட நான்கு பெண்களைத் தவிர மற்றவர்களைப் போகுமாறு கூறினார். பிறகு அவர்களை ‘விசாரித்துவிட்டு’ காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டு பொய் எனத் தெரிவதால் விசாரணை கைவிடப்படுவதாகக் குறிப்பிட்டு திருக்கோவிலூர் நீதித் துறை நடுவரிடம் வழக்கு தாக்கல் செய்தார். மொத்தத்தில், வன்புணர்ச்சி செய்யப்படவில்லை என்பது சோதனைக்குப் பிறகு அல்ல, இந்தச் சோதனைகளுக்கு முன்பே காவல்துறை ‘கண்டுபிடித்துவிட்டது’.

வன்புணர்ச்சிக்கு மருத்துவப் பரிசோதனை ஒன்றே இறுதிச்சான்றாகிவிடாது. அந்தப் பெண்களோடு கடத்திச் செல்லப்பட்ட அவர்கள் வீட்டு மூதாட்டிகள், சிறுவர்கள் எல்லோரும் சம்பவ இடத்திலே தான் இருந்தார்கள். அவர்களெல்லாம் இந்த அட்டூழியங்களுக்கு சாட்சியமாக இருக்கிறார்கள். வெறிபிடித்த அந்த மிருகங்களின் தடயங்கள் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண்களின் இந்த வாக்குமூலத்தில் இன்னமும் அழிக்கப்படாமல் தான் இருக்கிறது : “ இரவு 12 மணி அளவில் என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா எங்க நாலு பேரையும் கீழே இறக்கி, வண்டியில் வந்த நாலு போலீசும் ஆளுக்கு ஒருத்தரா எங்களை தனித்தனி மறைவிடங்களுக்குத் தள்ளிப் போனாங்க. என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே தள்ளி என் சேலையை உருவி மார்பகங்களைக் கசக்கினார். ‘நான் மூணு மாசம் முழுகாமல் இருக்கேன்….என்ன உட்டுடுங்க அய்யா’ன்னு கெஞ்சியும் அவர் விடல. நான் கத்த முயன்றபோது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழிச்சார். இதேபோல கார்த்திகாவைத் தள்ளிச் சென்ற போலீசிடம் அவள், ‘என்னக் கூடப் பொறந்த தங்கச்சி மாதிரி நினைச்சு உட்டுடுங்க’ண்ணு சொல்லிக் காலில் விழுந்து கெஞ்சினாள். அவளையும் கீழ தள்ளிப் படுக்கவச்சு அவ தாலிக் கயிற்றை அறுத்து எறிஞ்சிட்டு அந்தப் போலீஸ் கற்பழிச்சார் (ஆகா, என்ன சென்டிமென்ட் பாருங்கள். தாலிக்குத்தான் நமது காவல் துறையினர் எத்தனை மதிப்பளிக்கிறார்கள் !). வைகேஸ்வரியை தள்ளிச் சென்ற போலீஸ் அவளை முழு நிர்வாணமாக்கி, மார்புல எட்டி உதச்சுக் கீழே தள்ளிக் கற்பழிச்சார். ராதிகாவை மட்டும் இந்த நாலு போலீசில் மூணு பேர் மாறி மாறிக் கற்பழிச்சாங்க. நாங்க சத்தம் போடாம இருக்குறதுக்காக எங்க வாயைப் பொத்தி அமுக்குனாங்க.”

இந்த பகிரங்க வாக்குமூலத்திற்குப் பிறகும் காவல்துறை ரவுடிகளின் குற்றத்தை மூடிமறைக்க இவர்களுக்கு எத்தனை நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும்? நமக்கு ஒன்று விளங்குகிறது. தமிழகப் போலிஸின் ரவுடித்தனத்தை தமிழகப் போலிஸே (!) ‘விசாரிக்கும்போது’ நீதிகளுக்கோ உண்மைகளை வெளிக்கொணர்வதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை. தோழர்.கல்யாணி இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றச் சொல்லி வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரோடு இணைந்து நாமும் குரலுயர்த்துவோம்.

Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 11:32 PM 0 COMMENTS

‘சி.பி.ஐ விசாரணைக்குக் குரலுயர்த்துவோம்’

நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என நீதிமன்றம் பலமுறை கேட்டதற்கும் கண்டித்தற்கும் பதில் கூறுமுகமாக, மருத்துவப் பரிசோதனையில் எந்த ஆதாரங்களும் இல்லையென்றும் எனவே பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படவில்லை என்றும் டி.ஜி.பி. ராமானுஜமும் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலும் சொல்லியிருக்கிறார்கள். நவம்பர் 22 ஆம் தேதி காவல்துறை மிருகங்களால் வன்புணரப்பட்ட பெண்கள் மிகச்சரியாக ஒருவாரத்திற்குப் பின்பு நவ.29 ஆம் நாள் தான் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட உடல் அதன் இயல்புநிலைக்குத் திரும்பியபின்பு ஆதாரங்கள் எப்படிக் கிடைக்கும்?

நவ.26 ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண்கள், இருளர் அமைப்பினர் எல்லோருடனும் சென்று தோழர்.கல்யாணி விழுப்புரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் நீ. பாஸ்கரன் ஐ.பி.எஸ் புகாரைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதாகவும் வாக்களித்து பாதிக்கப்பட்ட நான்கு பெண்களைத் தவிர மற்றவர்களைப் போகுமாறு கூறினார். பிறகு அவர்களை ‘விசாரித்துவிட்டு’ காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டு பொய் எனத் தெரிவதால் விசாரணை கைவிடப்படுவதாகக் குறிப்பிட்டு திருக்கோவிலூர் நீதித் துறை நடுவரிடம் வழக்கு தாக்கல் செய்தார். மொத்தத்தில், வன்புணர்ச்சி செய்யப்படவில்லை என்பது சோதனைக்குப் பிறகு அல்ல, இந்தச் சோதனைகளுக்கு முன்பே காவல்துறை ‘கண்டுபிடித்துவிட்டது’.

வன்புணர்ச்சிக்கு மருத்துவப் பரிசோதனை ஒன்றே இறுதிச்சான்றாகிவிடாது. அந்தப் பெண்களோடு கடத்திச் செல்லப்பட்ட அவர்கள் வீட்டு மூதாட்டிகள், சிறுவர்கள் எல்லோரும் சம்பவ இடத்திலே தான் இருந்தார்கள். அவர்களெல்லாம் இந்த அட்டூழியங்களுக்கு சாட்சியமாக இருக்கிறார்கள். வெறிபிடித்த அந்த மிருகங்களின் தடயங்கள் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண்களின் இந்த வாக்குமூலத்தில் இன்னமும் அழிக்கப்படாமல் தான் இருக்கிறது : “ இரவு 12 மணி அளவில் என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா எங்க நாலு பேரையும் கீழே இறக்கி, வண்டியில் வந்த நாலு போலீசும் ஆளுக்கு ஒருத்தரா எங்களை தனித்தனி மறைவிடங்களுக்குத் தள்ளிப் போனாங்க. என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே தள்ளி என் சேலையை உருவி மார்பகங்களைக் கசக்கினார். ‘நான் மூணு மாசம் முழுகாமல் இருக்கேன்….என்ன உட்டுடுங்க அய்யா’ன்னு கெஞ்சியும் அவர் விடல. நான் கத்த முயன்றபோது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழிச்சார். இதேபோல கார்த்திகாவைத் தள்ளிச் சென்ற போலீசிடம் அவள், ‘என்னக் கூடப் பொறந்த தங்கச்சி மாதிரி நினைச்சு உட்டுடுங்க’ண்ணு சொல்லிக் காலில் விழுந்து கெஞ்சினாள். அவளையும் கீழ தள்ளிப் படுக்கவச்சு அவ தாலிக் கயிற்றை அறுத்து எறிஞ்சிட்டு அந்தப் போலீஸ் கற்பழிச்சார் (ஆகா, என்ன சென்டிமென்ட் பாருங்கள். தாலிக்குத்தான் நமது காவல் துறையினர் எத்தனை மதிப்பளிக்கிறார்கள் !). வைகேஸ்வரியை தள்ளிச் சென்ற போலீஸ் அவளை முழு நிர்வாணமாக்கி, மார்புல எட்டி உதச்சுக் கீழே தள்ளிக் கற்பழிச்சார். ராதிகாவை மட்டும் இந்த நாலு போலீசில் மூணு பேர் மாறி மாறிக் கற்பழிச்சாங்க. நாங்க சத்தம் போடாம இருக்குறதுக்காக எங்க வாயைப் பொத்தி அமுக்குனாங்க.”

இந்த பகிரங்க வாக்குமூலத்திற்குப் பிறகும் காவல்துறை ரவுடிகளின் குற்றத்தை மூடிமறைக்க இவர்களுக்கு எத்தனை நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும்? நமக்கு ஒன்று விளங்குகிறது. தமிழகப் போலிஸின் ரவுடித்தனத்தை தமிழகப் போலிஸே (!) ‘விசாரிக்கும்போது’ நீதிகளுக்கோ உண்மைகளை வெளிக்கொணர்வதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை. தோழர்.கல்யாணி இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றச் சொல்லி வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரோடு இணைந்து நாமும் குரலுயர்த்துவோம்.

Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 11:32 PM 0 COMMENTS

Saturday, January 7, 2012

வாசனையூர்


நிறைநிலா நாளொன்றில்
இந்தப் பாலத்து வளைவில்
சின்னப்பெண் ஒருத்தி சைக்கிளில் மோதி
ரத்தம் வழிந்தோடக் கிடந்தாள்.
பாதப்புழுதியால் நிறமாறி
தூரமாய் கிடந்தது
அவள் கூந்தல் மல்லிகைச் சரம் .

நகரமே அச்சரத்தால் மணத்துக்கிடந்தது.
ஜனங்கள் ஆழ்ந்து சுவாசித்து
மணத்தை உள்ளிழுத்தனர்.

இருளோடு அவ்வாசமும் கவிந்தது

அன்றிரவு நகரத்தில் பித்தம் தெளிந்த ஒருத்தியைத் தவிர‌
யாரும் உறங்கவில்லை.
மல்லிகை வாசத்தில் திணறிய மாடுகள்
புறநகர் கொட்டில்களிலிருந்தும் தெறித்தோடின

சித்தம் குலைந்தவள் தன்
சிக்குத் தலையை முகர்ந்துகொண்டு உறங்குவதைக் கண்டதும்
அவளின் முடியை ஆளுக்குக் கொஞ்சமாய்ப் பிய்க்க‌
வலியேதும் அறியாதவளாய்
ஆழ்ந்த உறக்கத்திலாழ்ந்திருந்தாள்

குழந்தைகள் வழக்கம்போல் உறங்கிப்போயின‌
பெண்கள் குழந்தை பால்வாசத்தை சுவாசிக்க முயன்று
பீத்துணியை மூக்கினருகே வைத்துக்கொண்டனர்

வேறுசிலரோ கழிப்பறையில் படுத்துக்கொண்டனர்

குளத்துமீன்கள் அன்று நிலவைப் பார்க்க மேலே வரவேயில்லை

க‌ரும்பித்த நிற‌த்தில் விடிந்த காலையில்
சிவ‌ந்த‌ க‌ண்க‌ளோடு வ‌ந்த‌ அதிகாரிக‌ள் பூச்சிம‌ருந்தை அடித்துச்சென்ற‌ன‌ர்.

வாச‌ம் இன்னும் பெருகிய‌து
நோயுற்றவனின் பிணவாடைய‌போல‌

ம‌ருந்து காற்றை வாய்வழி சுவாசித்த‌வ‌ர்க‌ளின்
ப‌ற்க‌ள் குருதியில்லாம‌ல் விழ‌த்தொட‌ங்கிய‌ன‌.

மீண்டும் வ‌ந்த‌ அதிகாரிகளைக் க‌ண்டு
துளைகள் மூடியோடினர்

ஏதும் புரிய‌வில்லை.

சித்தம் குலைந்த பெண் எழுந்துவிட்டாள்.

குள‌த்தில் குளித்த‌தும் க‌ரையிலிருந்த‌
காட்டுப்பூ ஒன்றைப் ப‌றித்துகொண்டாள்.

சாலையைத்த‌விர்த்து ந‌ட‌ந்துசென்று
நேற்று இற‌ந்த‌
சின்னப்பெண்ணின் சமாதியை கீறி
அப்பூவை வைத்து ம‌ண்மூட‌

வாச‌ம் அந்ந‌க‌ர‌த்தை விட்ட‌க‌ர்ந்த‌து.

ப‌ல ஆண்டுகளாகியும்
அந்ந‌க‌ர‌த்தை எவ்வாச‌மும் தீண்ட‌வில்லை.

.

திரு.க.செண்பகநாதனுக்கும். திரு. ஜெ.சாந்தாராமுக்கும் நன்றிகள்.
.
[ மந்திரச்சிமிழ் இதழில் வெளிவந்த கவிதை]

Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 2:10 AM 0 COMMENTS

Saturday, December 10, 2011

உயிர் எழுத்து இதழில் வெளிவந்துள்ள என் சிறுகதை



.
1. வாசனையை பின் தொடருதல்

நிவி' யின் வீட்டிற்கு அண்மையிலிருக்கும் அந்த திடலில் யாரும் விளையாடவருவதேயில்லை. வீட்டிற்குள் தனியாக விளையாடி அலுத்துவிட்டால் நிவி அந்த திடலுக்கு சென்று படர்ந்து கிளைபரப்பியிருக்கும் தூங்குமூஞ்சி மரத்தின் கீழ் அமர்ந்துக்கொள்வாள். வேகமாக வீசும் காற்றில் கலையும் தலைமுடியை ஒழுங்குசெய்துகொள்வதும், விலகும் ஆடைகளை மீண்டும் சரியாக பொருத்திக்கொள்வதுமே தனி விளையாட்டாகி போய்விடும். ஒரே வரிசையில் பொங்கன் மரமும் ரெட்டை தூங்குமூஞ்சி மரங்களும் அத்திடலுக்கு தேவையான நிழலைத்தந்துவிடும்.

இன்றும் அப்படித்தான் நிவி அந்த திடலில் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். காலையில் பறவை பிடிப்பவர்கள் வந்திருப்பார்கள் போலிருக்கிறது. சின்ன முட்டை ஒன்று உடைந்து கிடந்தது. யாரோ கூப்பிடுவது போலிருந்தது. திரும்பி பார்த்தாள். தூரத்தில் வீட்டில் அம்மா துணி உலர்த்திக்கொண்டிருந்ததை தவிர வேறு யாருமேயில்லை. வழக்கமாக மாடுகளை மேயவிட்டு இளைப்பாறும் வேணி பாட்டியைக்கூட இன்று காணவில்லை. காற்றின் வேகம் கூட இன்றைக்கு சுரத்தையில்லாமல் வீசுகிறது. அந்த திடலில் வலதுமூலையில் மரங்கள் ஏதுமில்லாமல் வெயில் அதிகமாக இருக்கும். அதில் யாரோ எள் செடிகளை பிடுங்கி காயவைத்திருந்தார்கள்.

சுவாரசியமின்றி அமர்ந்திருந்த நிவியை கடக்கும் காற்றில் ஏதோ புதுவாசம் இருப்பதை உணர்கிறாள். மூக்கினை கூர்மையாக்கி சுவாசிக்கிறாள். மகிழம்பூ வாசம் உடலெங்கும் புகுந்துக்கொள்ள உடல் இறக்கையாகி விட துடித்தது.எழுந்து வாசனை வந்த திசையை நோக்கி நடக்கத்துவங்குகிறாள். திடலை விட்டு வாசம் அவளை வெளிக்கொண்டுவருகிறது. மரங்களின் நிழலிலிருந்து வெயிலை சுமக்கும் வயல்களில் நடக்கிறாள். வரப்புகளை தாண்டுகையில் மாத்திரம் வாச சுவாசம் தடைபடுகிறது. வயல்களின் ஒருமுனை முடிந்த நிலையில் ஒற்றையடி பாதையை கடக்கிறாள்.

சலசலப்போடு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. நிற்கிறாள். மகிழ்ம்பூவின் வாசம் முன்னையை விட அதிகமாக அவளைத் தீண்ட சுற்றிலும் தேடுகிறாள். மரத்தை காணோம். அவளின் நினைவிலும் அங்கு மகிழம்பூ மரம் இருந்ததாக பதிவில்லை. யாரோ தன்னை தொடவது போல திரும்பி திரும்பி பார்த்துக்கொள்கிறாள். ஆற்றில் ஓரு காலை நனைக்கிறாள். ஆற்றின் உன்னத ஈரம் அவளின் அடுத்த காலை இலகுவாக ஈர்த்துக்கொள்கிறது. வெயிலின் நேர்க்கோட்டில் ஆற்றில் நீந்தும் மீன்களின் பயணத்தில் நிவி பார்வையாய்கலந்துக்கொள்கிறாள். கூட்டம் கூட்டமாய் மீன்கள் நீந்திக்கொண்டு செல்கிறான. தூரத்தில் பார்க்கிறாள். வெகுதூரம் வரை மீன்களின் வருகை இடைவெளியில்லாமல் வந்துக்கொண்டிருந்தது.குனிந்து மீன்களை பார்த்து அவற்றின் விரையும் பயணம் பற்றி கேட்கிறாள். மகிழ்ம்பூ வின் வாசத்தினை பின்பற்றி சென்றுக்கொண்டிருப்பதாக சொல்கின்றன.


"நானும் வரட்டா" எனக்கேட்பதற்குள் மீன்கள் சிட்டாய் பறந்துப்போயின. நிவியும் கூடவே நீந்திக்கொண்டு அம்மீன்களை நெருங்கினாள். "நீயும் வருகிறாயா" எனக்கேட்டுக்கொண்டே விரைந்தன மீன்கள். "இன்று நீரில் ஒளி இறங்கியதிலிருந்து இந்த வாசம் வீசிவருகிறது. அது எங்கிருந்து வீசுகிறது என தெரிந்துக்கொள்ளப்போகிறோம் "என்றன மீன்கள்.. சொல்லிவிட்டு "அதற்குதானே நீயும் வருகிறாய்" என்றது ஆமாம் என்பதாய் தலையசைத்தாள்.


"வாசம் வருமிடத்தை பார்த்ததும் என்ன செய்யப்போகிறாய்"என மீன்கள் கேட்ட பிறகுதான் நிவிக்கும் அந்த கேள்வி வந்தது. மகிழம்பூ மரத்தை பார்த்ததும் என்ன செய்யப்போகிறேன் .?..


இரண்டு பாம்புகள் இவர்களை முந்திச்சென்றது. மீன்களோடு நீந்திவரும் நிவியை பார்த்ததும் சிறிது நேரம் நின்றது. நிவி பாம்புகளோடு சேர்ந்து நீந்ததுவங்கினாள்.. பாம்புகள் தாங்கள் வெகுதூரத்திலிருந்து வருவதாகவும், வாசனை வருமிடம் எங்கு இருக்கிறதென அவை பார்த்துச்சென்று மற்றவைகளை அழைத்து வரவேண்டியிருப்பதால் விரைந்து செல்லவேண்டும் நீ மீன்களோடயே வா என்று சொல்லி விரைய நிவி மீன்களை பார்க்க திரும்பியவள் அதிர்ந்துப்போனாள். ஒரு மீனையும காணோம். மீண்டும் திரும்பி பார்க்க பாம்புகளையும் காணோம். கண்ணுக்கெட்டியவரை அவை நீந்துவதுபோலவே தெரியவில்லை. ஆறு இவள் நீந்தும் சலனமுமற்று மெளனித்திருந்தது. இவள் களைப்பாகி தண்ணீரின் மேலே வந்தவளுக்கு மேலுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. இவள் ஆற்றில் இறங்கிய இடத்திலேயே இன்னும் நின்றுக்கொண்டிருந்தாள். மறுகரையில் இவள் ஏறியதும் ஆறு மீண்டும் சலசலக்க ஆரம்பித்தது

கரையில் ஏறியதும் உடைமீது உடல் மீதும் ஒட்டியிருந்த நீர் சட்டென்ற உலர்ந்த ஆச்சரியத்திலிருந்து மீள்வதற்குள் எதிரே விசித்திரமான மனிதன் ஒருவனை பார்த்தாள் நிவி. ஒரு ஆட்டுக்குட்டியின் உயரேமுள்ள அவனின் கண்களும் காதுகளும் பெரிதாக இருந்தன. அவனுக்கு ஒரு கை மாத்திரமே இருந்தது. மறுபுறம் இறக்கையொன்று இருந்தது. அவன் நிவியை பார்த்ததும் "மகிழம்பூ மரத்தை பார்க்கவந்தாயா.. உன் கையில் என்ன ஓட்டியிருக்கிறது" என்றான். அப்போதுதான் நிவி பார்த்தாள். மீன்களின் சில செதில்களும் பாம்பு நஞ்சின் நிறத்தில் கொஞ்சமும் அவள் கையில் ஒட்டியிருந்தது.' மீன்களோடும் பாம்புகளோடும் நீந்தினாயா" என்றான் அவன். நிவி தலையசைத்தாள்

"அவை எப்போதுமே எங்கும் சரியான வழியை காட்டுவதில்லை. நேற்று வந்த சிறுவனிடமிருந்த சர்க்கரை கட்டியை பிடுங்கி கொண்டன. அவன் அந்த சக்கரை காணாது மகிழம்பூ மரத்தை பார்க்காமலே திரும்பிவிட்டான்.. சரி..விடு.. நீ பார்க்க வந்திருக்கிர மகிழம்பூ மரத்தை நாந்தான் சிறுசெடியாக நட்டேன். அதோ அந்த ஆற்றங்கரையோரத்திலிருந்துதான் பிடுங்கிச்சென்றேன். நீ அவசியம் அதை பார்க்கவேண்டுமா"

என்று கேட்டதற்கு நிவி மீண்டும் ஆமாம் எனத்தலையசைத்தாள். "வா.. நானே அழைத்துச்செல்கிறேன்" என்று முன்னே நடந்தான். சிறிதுதூரம் நடந்தபோது எதிரே ஒரு கருநீல முயல் ஒன்று ஓடிவந்தது. அதை கையால் தூக்கி நிவியிடம் தந்து தூக்கிவரச்சொன்னான். சரியென தூக்கிக்கொண்டு வந்தவளின் கைகளிலிருந்து நழுவி தோளில் ஏறியது. அப்படியே தலையில் ஏறி, பின் பக்கம் குதித்தது. திரும்பி அதை துக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தவள் முன்னே வழிக்காட்டிக்கொண்டிருந்த விசித்திர மனிதனை காணாது என்ன செய்வது என்பதாய் முயலை பார்த்தாள்.

"அவன் எப்போதும் அப்படிதான் வா நான் அழைத்துச்செல்கிறேன்." என்றது.. "நிவி மெல்ல தயங்கி நான் எங்கே போகிறேன் என உனக்கு தெரியுமா" என்றாள்."தெரியுமே.. மகிழம்பூ மரத்திற்குதானே" எனச்சொல்லிவிட்டு தாவி ஓடியது

முயலின் வேகத்திற்கு நிவியால் செல்லமுடியாமல் மெதுவாய் செல்ல ஒரு வளைவில் முயலையும் காணாது திகைத்து நிற்கையில் அடுத்த வளைவின் தொடக்கத்திலிருந்த மரத்திலிருந்து வெளியே வந்த முயல் "சீக்கிரம் வா" என்று சொல்லி காத்திருந்தது. நிவி மரத்தினருகே ஓடிச்செல்லும்போது மீண்டும் முயலை காணவில்லை

மகிழம்பூ மரத்தினருகே வந்ததை போல் அந்த பகுதியே மகிழம்பூ வாசனையால் நிரம்பிகிடந்தது. வந்துவிட்டோம்.. இந்த இடத்திலிருந்துதான் வாசம் வருகிறது. இங்குதான் அந்த மரம் இருக்கும். அந்த இடத்தில் காற்றின் அசைவே இல்லை ஆனாலும் வாசனை அங்கு இல்லாத இடமே இல்லை என்பது போலிருந்தது. அந்த இடத்தில் காய்ந்த இலை, சருகு, சிறு கிளை, விறகு எதையும் காண்பதற்கில்லை. எல்லாமே பசுமையாக இருந்தது. அந்த இடத்தில் வெய்யிலே இல்லை ஆனால் அந்த இடமே வெளிச்சமாய் இருந்தது. வாசனை ஒளிருமா என்ன? அப்படியெனில் இருட்டை எது தரும்.. பறவைகளின் சத்தமே இல்லை. ஆனாலும் பறவைகள் பறந்துக்கொண்டிருந்தன. வெளிர் நீல நிற பறவை ஒன்று ஒரே இடத்தில் பறந்துக்கொண்டிருந்தது

இதில் எந்த மரம் வாசனை மரம் என நிவியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் அந்த மரமா என ஒவ்வொரு மரமா பார்த்து ஏமாந்து சோர்ந்துபோனாள்

குட்டிஆடு ஒன்று ஓடிவந்தது. இந்த குட்டிஆட்டை எங்கோ பார்த்திருக்கிறோமே என யோசித்துக்கொண்டிருக்கையில் இன்னும் பல ஆடுகளும் குட்டிகளும் வர எல்லாவற்றையும் மேய்த்துக்கொண்டு வேணி பாட்டி அந்த ஆட்டுமந்தையின் பின்னாலே வந்தாள். திடலில் காயப்போட்டிருந்த எள்ளுச்செடியை நோக்கி ஆடுகள் ஓட வேணி பாட்டி பதறி ஆடுகளின் திசையை மாற்றினாள்.

நிவி உங்க அம்மா கூப்பிடுறாங்க பாரு என்று பாட்டிச்சொல்ல, அம்மாவின் குரல் அருகில் கேட்டது.

வீட்டிற்கு சென்றதும் ரகசிய பெட்டியைத்திறந்து மீனின் செதில்களையும் பாம்பு நஞ்சின் நிறத்தையும் விசித்திர மனிதனின் இறக்கையிலிருந்த உதிர்ந்த சிறகொன்றையும் தோளில் ஒட்டியிருந்த கருநீல முயல் முடி ஒன்றையும் பத்திரமாக வைத்தாள் நிவி.


2.இளவரசி தூக்கம்


"காலணிகளை அணிந்துக்கொண்டே தூங்குவது எனக்கு பிடிக்காது, ஆனால் பயணங்களில் அம்மா அப்படிதான் தூங்கச்சொல்கிறாள்" என்ற தொடரோடுதான் நிவியோடு உரையாடல் துவங்கியது. சாலையின் அடர் இருட்டை குடைந்து திசைகளுள் போய்கொண்டிருக்கிறது பேருந்து.

மரங்களின் இறக்கைகளில் தொற்றிக்கொண்டு மனிதர்கள் ஆங்காங்கே பேருந்தை வழிமறிக்கப்பார்க்கின்றனர். அவர்களிடமிருந்து சற்று தள்ளி அடர்மீசையோடு இரட்டை தலை பூனையொன்று பெரும் பாறையை புரட்டிக்கொண்டிருந்தது பேருந்தின் குறுக்கே உருட்டிவிட.. மழையற்ற அந்த காலத்தில் வானவிலின் துண்டொன்று சிக்னல்விளக்குகளின் நிறங்களை குலைத்துஓட்டுநனின் மனநிலையை கீறிக்கொண்டிருந்தது. பகலில் பார்வையற்ற பாவம்மிக்க அந்த ஆந்தையால் இவர்களை ஏதும் செய்வதற்கில்லை. எண்ணற்ற புறாக்களின் இறக்கைகளை கொண்டு வானத்தின் நிறத்தை சாலையில் வரவழைத்து ஓட்டுநனை திடுக்கிடவைத்த அந்த தேவதூதனை இதற்கு முன் யாரும் பார்த்ததேயில்லை.
நிவி நடப்பவற்றை அசைவற்று பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கான ஆறுதல்கள் இரண்டு. ஒன்று பேருந்து நிற்காமல் போய்க்கொண்டேயிருப்பது. மற்றது இறுகப்பிடித்திருக்கும் என் கைகள்.
இரட்டைத்தலை பூனை உருட்டிவந்த பொன்னிற பாறைமேல் உட்கார்ந்திருந்த கருத்த கிழவனின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. மரங்களின் இறக்கைகளில் தொற்றியிருக்கும் மனிதர்கள் மரங்களை வேகமாய் அசைக்க அந்த கிழவனின் நாற்றம் பேருந்தை நோக்கி விரைந்துவந்துக்கொண்டிருந்தது. நேர்க்கோட்டு சாலையில் திடுமென தோன்றிய பக்கவாட்டுப்பாதையில் ஓட்டுநனையும் மீறி திரும்பியது பேருந்து. சன்னல் வழியே எட்டிப்பார்க்க முயலும் நிவியை என் கரங்கள் அமைதிப்படுத்துகின்றன.
திரும்பிய சாலையின் இருபுறமும் மரங்களோ, வீடோ, கட்டிடங்களோ ஏதுமில்லை. தரிசாய் கிடந்தது நிலம். தூரத்தில் மாடுகள் மந்தைமந்தையாய் மேய்ந்துக்கொண்டிருப்பது போலிருந்தது. அருகே செல்லசெல்ல அவை அங்கிருந்து தூரப்போயின. சாலை நீண்டுக்கொண்டே சென்றது. முடிவற்ற அந்த சாலை ஓட்டுநனுக்கு ஓர் அச்சத்தை தந்தது..அவன் பேருந்தின் வேகத்தை குறைத்தான். மாட்டுச்சாணத்தின் வாசம் மெல்ல வீசியது. வேகத்தை இன்னும் குறைத்தான். மாட்டு மூத்திரத்தில் ஊறிய சாணத்தின் நெடி சுவாசிக்கவியலாதபடி அதிகரித்தது. நிவி கைகளுக்குள் வேர்த்திருந்தது. என் கண்களை பார்க்கிறாள்.
பேருந்து நிற்பதற்கான சற்றைக்கு முந்தைய நொடிகளுக்கு வேகத்தை குறைத்தான். பேருந்தின் கூரை சட்டென்று பறந்துப்போனது. என்னவென்று யூகப்பதற்குள் பழுப்புதிரவம் போல ஏதோ ஊற்றத்துவங்கிவிட்டது. ஓட்டுநன் மூர்ச்சையாகிவிட்டான். ஒரு பெண் எழுந்தோடி பேருந்தின் வேகத்தை உயர்த்துகிறாள். இன்னும்..இன்னும்...இன்னும் வேகத்தை கூட்ட,கூட்ட அந்த பழுப்பு திரவம் ஊற்றுவது நின்றுபோனது. எல்லோரும் மேலே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கூரை மாத்திரம் வரவேயில்லை. மேலும் வேகம் கூடகூட மூத்திர, சாணத்தின் துர்நாற்றமும் நின்றுப்போனது. . அவள் பேருந்தை வலதுப்பக்கம் திருப்பினாள். கொஞ்ச தூரம் சென்றிருப்பாள். மீண்டும் வலது பக்கம் திருப்பினாள்.. இரண்டு மரங்கள் கடந்ததும் மீண்டும் வலதுபுறம் பேருந்தை திருப்பினாள். அவளின் இடதுதோளில் ரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது. அதனால் அவளால் இடதுபுறமாக திருப்பவே முடியவில்லை. பேருந்திலிருந்த பழுப்புதிரவம் ஆவியாகிகொண்டிருந்தது.
அவள் மீண்டும் வலப்புறமாக பேருந்தை திருப்பியபோது பேருந்தை நோக்கி இரட்டைதலை பூனை புரட்டிக்கொண்டிருந்த அந்த பழுப்பு நிற பாறை வந்துக்கொண்டிருந்தது. ஆம். பேருந்து இயங்கத் துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்திருந்தது. துர்நாற்றமடிக்கும் அந்த கிழவன் அந்த பாறையின் பின்னால் ஓடிவந்துக்கொண்டிருந்தான். இவள் பேருந்தின் வேகத்தை குறைத்தாள். மாட்டுச்சாணத்தின் நாற்றம் பொங்கியது. வேகத்தை கூட்டினாள். பாறை நெருங்கிக்கொண்டிருந்தது. மரங்களிலிருந்து தன்னை விடுவித்து அதில் தொற்றியிருந்தவர்கள் கூரிய ஆயுதத்தோடு கூரையற்ற அந்த பேருந்தில் குதித்தனர். அவர்களை தொடர்ந்து இரட்டைதலை பூனையும் குதித்தது மெல்லிய சத்ததோடு.
நெருங்கிகொண்டிருந்த பாறையும் கிழவனும் பேருந்திற்கு சற்றுமுன் நின்றார்கள். கிழவன் திரும்பி ஓட ஆரம்பிக்க, பாறை அவனை தொடர, பாறை செல்லுமிடத்திற்கெல்லாம் பேருந்தும் செல்ல ஆரம்பித்தது. சாலையற்ற அந்த பாதையில் அதிராமல் போய்க்கொண்டிருந்தது பேருந்து. அவள் வேகத்தை குறைக்கும் பொத்தானை அழுத்தினாள் வேகம் குறையவேயில்லை. பாறையை தொடர்ந்து பேருந்து போய்ய்ய்ய்ய்க்கொண்டேயிருந்தது.
நிவி என் கரங்களை இன்னும் இறுக்கிப்பிடித்துக்கொள்கிறாள். நிவி அருகே இரட்டைதலை பூனை நின்றதும் என்னருகே நெருக்கமாக அமர்ந்துக்கொள்கிறாள்.
என்ன செய்தால் இவையெல்லாம் போகும் என கேட்கும் நிவியின் கேள்விக்கு பதிலற்று அவள் தலையை தடவிகொடுக்கிறேன். அவை காதுகிழியும் அளவு சத்தம் போட்டால் ஓடிவிடுமா எனக்கேட்மவளுக்கு மவுனத்தை பதிலளிப்பது எனக்கும் உவப்பில்லைதான் ஆயினும் எனக்கு வேறு பதில்களில்லை. அவள் சோர்ந்துபோய்விட்டாள். பூனையில் வால் இவளின் உடல்மேல் பட உடல் சிலிர்த்துப்போகிறாள் .
ஏதோ ஒன்றை கண்டுபிடித்தவள்போல அகலாமான விழிகளோடு," பேரச்சம் தரும் பயங்கர கதையொன்றை சொன்னால் பயந்துஓடிவிடுமல்லவா..? " என்பவளிடம் கதைகள் ஓடவைக்குமா என கேட்க தோணாமல் எனக்கு பயங்கர கதை தெரியாததை சொல்ல... தெரிந்த கதையை சொல்லுங்க.. ஓடுமா எனப்பார்க்கலாம்.. என்பவளுக்கு எனக்கு தெரிந்த ஒரே கதையான மாய இளவரசியை சொல்லதொடங்கினேன்.

ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்...

ம்..

அந்த ராஜாவுக்கு ஒரு மகளாம்...

ம்..

அந்த இளவரசி பேரு மஞ்சரி. . .

ம்..

அந்த இளவரசி மஞ்சரி ரொம்ப அழகா இருப்பா.

ம்..

அவளை திருமணம் செய்துக்க நிறைய பேர் போட்டிபோட்டாங்க..

ம்..

ஆனா ஒரு மந்திரவாதி அந்த இளவரசியை மாயமாக்கி காணாமல்செய்திட்டான்..

ம்...ம்..

அந்த நாட்டில் பார்கவன் எனும் வேடன் இருந்தான் அவனுக்கு மந்திரம் எல்லாம் தெரியும்.

ம்..ம்.

ம்.. ம்.. ம்.. ம்..ம்.. ம்.. ம்...ம்..

பார்கவன் இளவரசியை காப்பாற்றி அரண்மனைக்கு கொண்டாந்தான்.
ம்.

ராஜா அவனுக்கே இளவரசியை கல்யாணம் செய்து கொடுத்திட்டாரு.. கல்யாணமும் நடந்தது.

ம்.. அப்புறம்..

நாட்டுக்கே விருந்து நடந்துச்சி..

ம்..அப்புறம்..

அப்புறம் என்ன விருந்து திண்ணுட்டு நல்லா தூங்கினாங்க..

எப்படி தூங்கினாங்க..

இருக்கையில் நன்றாக சாய்ந்து தூங்கிவதுபோல செய்துக்காட்ட, நிவி என்னை இருக்கையாக்கி மேல்சாய்ந்து இப்படியா எனக்கேட்டுக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். சிறிதுநேரம் அப்படியே படுத்திருந்தாள்.

நிவி..நிவி..
தலையை தடவுகையில் அவள் நன்றாக தூங்கியிருந்தாள்.
நிவிக்கு தூங்குவது என்றால் தூங்துவதுதான். கூரிய ஆயுதத்தால் இரட்டைதலை பூனையின் வயிற்றின் ஒருவன் கிழித்தான். என் உடல் நடுங்கத்தொடங்கியது.


3. காலத்தை துரத்தும் சித்தார்த்தன்


நீல நிற வண்ணம் பூசிய அந்த பொம்மை விற்பனை கடையுனுள் நிவி நுழைந்த போது வெகுதூரத்திலிருக்கும் தேவாலயத்தில் பதினாறாவது மணி ஒலித்தது. பணியாளர்கள் யாருமில்லாத கடை நிவிக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. கைகளை உரசிக்கொள்கிறாள். விரல் பிடித்து அழைத்து, வாசல் வரை வந்த மாமாவை காணாது தேட நினைத்தவளின் முதுகு ஈரம்பட திரும்பியவளின் முகத்தை நக்க நாக்கினை நீட்டியது வரிக்குதிரையொன்று.நகர்ந்துகொள்
கிறாள். குதிரை தன் கால்களை இடம்மாற்றி மாற்றி வைக்க அதனருகிலிருந்த மயிலின் தோகை மீது உரச மயில் நகர்ந்து நாக்கிநகர்ந்து நாட்டுக்கோட்டை செட்டியாரருகே சென்றுவிட்டது.

கடையில் விளக்குகள் அணைந்துபோக சன்னல்கள் திறந்து ஒளியை உள்ளே அனுப்பின. மொட்டுகள் மலர்ந்த வாசமும், அங்கிருந்த பச்சை எல்லாம் பசுமையாக மாறிப்போக அதன் குளிர்ச்சியும் நிவி உள்ளே நுழைந்த போதிருந்த மரங்களை ஒட்டும் பசை வாசம் வெளியேறி, பூவின் வாசத்தாலும், சோம்பல் முறிப்பொலியாலும் அக்கடை நிறையத்தொடங்கியது. மன்னரை சுமந்துவந்த போர்குதிரை மன்னரை இறக்கிவிட்டு ஒருவருடமாக மிக அருகிலிருந்தும் குடிக்கமுடியாத தண்ணீர் குவளையினுள் தலையை நுழைக்கிறது. குதிரையிலிருந்து இறங்கிய மன்னன் அருகிலிருந்த இசைக்கருவியின் தந்திகளை மீட்டிப்பார்க்கிறான் அதற்கு முன் கழற்றி வைத்த கிரிடத்தில் வந்து அமர்கிறது மீனாட்சி சிலையிலிருந்த கிளி. மீனாட்சி சத்தமிடுகிறாள். சீக்கிரம் வந்துவிடு நீ இல்லையேல் என்னை மீனாட்சி என ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கிளி மிக அலட்சியமாக கிரிடத்தின் ரத்தின கற்களை கொத்திக்கொண்டே சிறகுகளை சிலுப்பியது. பன்னெடுங்காலமாக விரிக்காத சிறகுகள் கெட்டித்தட்டிபோனதுபோல இருந்ததால் உடனே பறக்க முடியவில்லை. திடிரென்று விர்ர்ர்ன்னு பறக்க ஆரம்பித்தது கிளி.. அந்த கடையின் மொத்த பரப்பையும் பார்த்துவிட துடித்தது. சன்னலருகே பறந்தாலும் அது வெளியே செல்லவில்லை.

நிவி தாகமெடுக்க அவள் தண்ணீர் குவளையினுள் தண்ணீர் உறைந்திருப்பதை கண்டு திகைக்கிறாள். தாகம் தீர்த்துக்கொண்டிருந்த குதிரை அவளை அழைத்து தண்ணீர் இருக்கும்மிடத்தை காட்ட அவள் கையிலெடுத்து கொஞ்சமாய் குடிக்கிறாள். வழிந்தோடிக்கொண்டிருக்கும் அருவி நீரை இருகைகளாலும் அள்ளி குடிக்கும் அவரை யார் என கேட்பதற்குமுன் , யசோதாவை நீ பார்த்தாயா" என அவர் கேட்க நிவி குழம்பிபோனாள். நாந்தான் கெளதம சித்தார்த்தன் என்னுடன் இருந்த யசோதாவை உன்னைபோல சின்னப்பெண் ஒருத்தி வாங்கிபோய்விட்டாள். அந்த சின்னப்பெண்ணின் கண்கள் அவள் அம்மா அணிந்திருந்த தோட்டில் பதிருந்திருந்த வைரத்தை போல ஜொலித்தது. நீ பார்த்திருக்கிறாயா வைரம் ஜொலிக்கும் கண்களுடைய சின்னபெண்ணை.. நிவி "இல்லை என்றாள். சித்தார்த்தன் நீரை அள்ளி முகத்தை கழுவிக்கொள்கிறார். யசோதாவை நானாக விட்டுபோனால்தான் நான் புத்தராக முடியும் எனச்சொல்லிவிட்டு நிவிக்கு பின்னே பார்க்கிறாள். அங்கு அவர் அம்மாவின் கனவில் வந்த வெள்ளை யாணை கொஞ்சம் கொஞ்சமாக பழுப்பு நிறமாகிக்கொண்டிருந்தது.

கரடி ஒன்று நிவியை நோக்கிவர அருகேயிருந்த மரத்தில் ஏற நினைக்கிறாள். மரத்தை விட பெரிதாக இருக்கும் கரடி எளிதில் இவளை பிடித்துவிடும் என்பதால் மரத்தை பிடித்துக்கொண்டே நிற்க கரடி நிவியை கடந்து சென்று ஒரு அடர்வன நிறத்திலிருந்த துணியில் மோதி திரும்பி வந்தது. மீனாட்சி தன் மூக்குத்தி துவாரம் பெரிதாகிவிட்டது யாரேனும் அதனை சரி செய்து தருவீர்களா என்று கேட்டுக்கொண்டேயிருந்தாள்.நிவியின் கால்கள் சோர்ந்துப்போக அருகிலிருக்கும் மரத்திண்டில் அமரபோனாள். சித்தார்த்தான் ஓடி வந்து அந்த மரத்திண்டின் மேலிருந்த வெள்ளை வண்ணப்பூச்சியினை தன் கைகளில் ஒட்டிக்கொள்கிறான். நிவி புரியாமல் சித்தார்த்தனை பார்க்க இது யசோதையின் மேல் பூசியிருந்தது. யாரும் தொடாமல் அப்படியே இருந்தது. நீ கூட யசோதாவை வாங்கிச்சென்ற சிறுமியை போலவே இருக்கிறாய்.. நிவி சற்று மிரண்டு .. " அது நான் இல்லை" என்றபடி வெள்ளை நிற கரடியருகே நின்று கொள்கிறாள். சித்தார்த்தன் தன் கைகளிலிருக்கும் வெள்ளை நிறத்தை தன் உடல்முழுதும் பூசிக்கொள்கிறான். மீனாட்சி சித்தார்த்தனிடம் இவ்வளவு பிரியம் இருக்கும் உன் யசோதாவை ஏன் பிரிய நினைக்கிறாய்... சித்தார்த்தன் ஏதும் பேசாமல் வெள்ளை யாணையின் துதிக்கையை பிடித்தப்படியே நடக்கதுவங்கினான்.

மீனாட்சி தன் கேள்வியை அலட்சியம் செய்துபோகுமவனை முறைத்துவிட்டு பறந்துக்கொண்டேயிருக்கும் கிளியை மீண்டும் அழைக்கலானாள். நிவி அப்போதுதான் கவனித்தாள் வழிந்தோடிக்கொண்டிருக்கும் அருவியின் நீர் இவள் காலருகே வந்ததும் மறைந்துப்போயின. வெளிர்பழுப்பு நிற யாணை மீனாட்சியருகே வந்து அவள் தலையிலிருக்கும் கிரீடத்தை பிடித்திழுக்க செய்வதறியாமல் திகைக்கிறாள். பாறையிலிருந்து எழுந்து கடையின் வாசல் தாண்டி வெளியே வருகிறாள். பெருஞ்சத்ததோடு சன்னல் கதவுகள் மூடிக்கொண்டன. ஒன்றோடு ஒன்று மோதி அலறியதை கேட்டவள் திரும்ப கடைக்குள் நுழைய சன்னல்கள் திறந்துக்கொண்டு மீண்டும் ஒளியை உள்ளே அனுப்பியது. வெள்ளையானையின் துதிக்கையை பிடித்துக்கொண்டு நடந்த சித்தார்த்தான் தான் சிலநொடிகள் மீண்டும் பொம்மையாகி உயிர்பெற்றிருப்பதை உணர்ந்தான். அவனைப்போலவே அங்கிருந்த அனைத்துமே.

எல்லாம் சேர்ந்து நிவியிடம் வந்தன
.
நிவி அச்சத்தோடு வாசலைப் பார்த்தாள்.

வேண்டாம்.. நீ வெளியேறிவிடாதே.. நீ சென்றுவிட்டால் நாங்கள் மீண்டும் பொம்மையாகிப்போவோம். சித்தார்த்தன் முதலில் சொன்னான். பின் எல்லாம் ஒரே குரலில் அதையே சொன்னது. நிவி தான் வீட்டிற்கு சென்றே ஆகவேண்டியது மெதுவாக சொன்னதும். எல்லோர் கண்களிலும் அச்சம் புகுந்துக்கொண்டது.

நாங்கள் என்ன செய்தால் நீ இங்கேயே இருப்பாய்"கரடி கேட்க, கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் அம்மா கண்களை பொத்திக்கொள்ளும்போது ஒளிந்துகொள்ளும் மறைவிடங்களையும், வீட்டிற்குள் நுழையும் போது ஓடிவந்து கட்டிக்கொள்ளும் செல்லநாயை பற்றி சொன்னாள்.

மீனாட்சி தன் கிளியின் இறக்கைகள் மீண்டும் சிறைப்படும் கோகத்தை தடுக்கவாது நீ இங்கிருக்கவேண்டும் என்றதற்கு, பள்ளித்தோழியின் புத்தகத்தின் குட்டிப்போடுவதற்காக வைத்திருக்கும் மயிலிறகின் ஒரே சாட்சியான அந்த பொழுதுகளை உலர்த்தினாள் நிவி.

கிளி உதிர்ந்த இறக்கை ஒன்றை நிவியின் கைகளில் தந்துவிட்டு மீண்டும் அந்த பறக்கலானது. நிவி அந்த இறக்கையை பத்திரப்படுத்திக்கொண்டாள். பழுப்பாகிக்கொண்டிருந்த யானை நெருங்கி வந்து "இங்கிருக்கும் யாரை உன் வீட்டுக்க்கு வாங்கிச்செல்லப்போகிறாய்?

நிவி அந்த நினைவே இல்லாதிருந்ததால் ஏதும் சொல்லாமலிருந்தாள்.

யாரையும் அழைத்துச்செல்லவில்லை என்றால் நீ மறுக்காமல் இங்கேயே இருந்துவிடு என்றது யானை.

நான் இங்கிருந்து சென்றுவிட்டால் உங்கள் நிறம் பழுப்பாவது நின்றுவிடும் மாறாக நானிருந்தால் இன்னும் நிறமிழந்துபோய்விடுவீர்கள்

யானை சித்தார்த்தனைப்பார்த்துக்கொண்டே சொன்னது. வேண்டாம்.. நிறத்தை விட முக்கியமானது இயங்குவது.

மறைந்திருந்த இருஜோடி முயல்கள் நிவியின் கால்களை சூழ்ந்துக்கொண்டது. வரிக்குதிரை நிவியருகே வர முயல்கள் பயந்தோடின. என்னை உன் வீட்டுக்கு அழைத்துச்செல்வாயா? என நம்பிக்கையற்ற குரலில் கேட்டது வரிக்குதிரை.

நிவி பதிலேதும் சொல்லவில்லை. "தூரத்திலிருந்து பார்த்தாலும் உன் கண்கள் யசோதையை வாங்கிச்சென்றவளின் கண்களை போன்றே இருக்கின்றன" என்றான் சித்தார்த்தன். நிவி தான் தூங்குவதற்கு முன் அம்மா தன் கண்களில் முத்தமிடுவதை மிதக்கவிட்டாள்.
என்னை வாங்கிச்செல்வாயா" தீனமற்ற குரலில் கேட்டான் சித்தார்த்தன்.

நிவி பதிலேதும் பேசவில்லை. தேவாலயத்தின் அடுத்த மணியடிக்க எல்லோரும் அந்த ஒலியை நோக்கி திரும்பிப்பார்த்தனர். அந்த ஒலி நீண்டுக்கொண்டே சென்றது. அவர்களின் செவியின் உட்புறத்தில் நிரந்தரமாக இருக்கும் வண்ணத்தினை மெல்ல அசைத்தது. அந்த அசைவு தனக்கானதில்லை என்பதாக தலையை சிலுப்பிக்கொண்டன அனைத்தும். அந்த ஒலி கிளியில் இறக்கைகளில் ஏறிக்கொண்டதைப்போல அந்த அறையை நிறைக்கலானது. யானை அந்த ஒலி சத்தம் பொறுக்காது பெரும் பிளிறலை பிளிறியது. அந்த பிளிறலில் திசைகுழம்பிய கிளி மீனாட்சியின் கையில் வந்தமர்ந்தது. மீனாட்சி தன் மூக்குத்தியை மீண்டும் மாட்டிக்கொண்டு காதுகளை பொத்திக்கொண்டாள். மிக இலகுவாக மணியோசை அவள் கைகளை கடந்தது. மயில் எழுந்து நடனமாடத்துவங்கியது. அந்நடனம் மழைக்கான வரவேற்பை இன்னும் கூட்டின.யானை அருவிச்சார‌ல் ப‌டும்ப‌டி ப‌டுத்துக்கொண்ட‌து.

சித்தார்த்த‌ன் மீண்டும் கேட்டான்." என்னை வாங்கிச்செல்வாயா?

அந்த‌ யானையை பிரிவ‌தில் உன‌க்கு வ‌ருத்த‌மில்லையா..

சித்தார்த்த‌ன் யானையை ஒருமுறைப்பார்த்துவிட்டு "ய‌சோதா உன் வீட்ட‌ருகே இருக்க‌லாமில்லையா? என்றான்.

"இருந்தாலும் உன்னால் எப்ப‌டி தேட‌முடியும்?

"ஏன் முடியாது நான் இப்போது பொம்மையில்லையே..நீ அருகில் இருந்தால் நான் உயிர்பெற்று இருப்பேன் அல்ல‌வா..

சித்தார்த்த‌ன் தன் கையால் ஆடையின் முனையை ஆட்டிக்கொண்டே பேசினான். அவ‌ன் அது ஒருபுற‌ம் ம‌ட்டும் இற‌க்கை அசைவ‌துபோலிருந்த‌து.அவன் இமைகள் இயல்பிற்கு மாறாய் அதிகமாய் இமைத்தன.

தேவ‌ல‌ய‌த்தின் அடுத்த‌ம‌ணி அடிக்க‌த்துவ‌ங்கிய‌து. கிளி த‌ன் ப‌ற‌த்த‌லில் வேக‌த்தை இன்னும் கூட்டிய‌து. யானை தேங்கிய‌ அருவி நீரில் இற‌ங்கிய‌து.முய‌ல்க‌ள் புற்க‌ளை ஆவேச‌மாக‌ மேயத்துவ‌ங்கின‌. அதுவ‌ரை பேசாதிருந்த‌ நாட்டுக்கோட்டை செட்டியார் எழுந்து வ‌ந்து ம‌யிலின் இற‌கொன்றை எடுத்து காது குடைந்துக்கொண்டே நிவிய‌ருகே வ‌ந்தார்.அவ‌ர் தொந்தியின் மீதிருந்த‌ வ‌ண்ண‌ங்க‌ள் அவ‌ர் சுவாசிப்ப‌த‌னால் மெல்ல‌ உதிர்ந்துக்கொண்டிருந்த‌ன‌.

நிவி தன் கைகளில் படிந்திருந்த மணற்துகள்களை தட்டிவிடுகிறாள். தேவாலயத்தின் மணியோசை அடித்துமுடிந்திருந்தது. சன்னலோரமாய் சாய்ந்திருந்த கிருஷ்ணன் தன் புல்லாங்குழலால் முதுகு சொறிந்தபடியே வெளியே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். நிவி அவனருகே வந்தாள்.

நீ மட்டும் ஏன் உயிர்பெற்றும் சிலைப்போல நிற்கிறாய்..

நீ எப்போது இந்த கடையிலிருந்து செல்வாய்?

ஏன்?

என் அம்மா எனக்காக வைத்திருந்த வெண்ணை நான் உயிர்பெற்றதும் துர்நாற்றமடிக்கிறது. என் அம்மா வருவதற்குள் நான் சாப்பிட வேண்டும் என இத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறேன். நீ இன்னும் சிறிது நேரம் இங்கிருந்தால் அந்த வெண்ணை உண்ணும் நிலையற்றதாக போய்விடும். எனவே சீக்கிரம் இங்கிருந்து சென்றுவிடு..

இத்தனை ஆண்டுகளாக ஏன் அதனை சாப்பிடவில்லை.

என் கைகள் புல்லாங்குழலிலேயே மாட்டப்பட்டிருந்தன. அதான்..

சரி.. இப்போது வெண்ணை கெட்டுப்போவதற்குள் சாப்பிட்டுவிடேன்.

இல்லை என்னால் இப்போது சாப்பிடமுடியுமென தோன்றவில்லை.

ஏன்..

தெரியவில்லை. ஆனால் இப்போது சாப்பிடும் எண்ணம் தோன்றவில்லை. அதோ சன்னலுக்கு வெளியே போய்க்கொண்டிருக்கிற அந்த பசுவை பின்னேதான் என் அம்மா சென்றாள் இப்போது பசு மட்டும் வருகிறது அம்மா ஏன் வரவில்லை என்பதாகவே இருக்கிறது என்யோசனை.

நிவி சன்னலுக்கு வெளியே பார்த்தாள் முகத்தில் வெள்ளையும் உடலில் செம்பழுப்பு நிற பசு நின்றுக்கொண்டிருந்தது.

கடையிலிருந்த அனைத்து உயிர்பெற்றிருந்த பொம்மைகளும் இருவருகருகே வந்தன.

நீ போய்தான் ஆகவேண்டுமா..

நிவி பசுவின் பால்சுரக்கும் மடிகளை பார்த்தாள்.

அப்படியென்றென்றால் நீ சித்தார்த்தனை கூட்டிச்செல் என்றன அனைத்தும் ஒத்த குரலில்.
சித்தார்த்தன் முன்னே வந்தான். மறுப்பேதும் சொல்லாமல் தன்னை அழைத்துசெல் எனும் விதமாக அவன் அடிக்கடி இமைக்கும் கண்கள் கேட்டன. நிவியின் விரல்களை சித்தார்த்தன் பிடித்துக்கொண்டான். எல்லாவற்றிடமிருந்து விடைபெறும் விதமாக பார்த்தாள். அனைத்தும் அதனதன் இடத்தில் போய் நின்றும் படுத்தும் சாய்ந்தும் கொண்டன. சித்தார்த்தன் பெருமகிழ்வோடு புறப்பட்டான்.

பணம் கட்டும் மேசையருகே வந்ததும் யாரிடம் பணம் தருவதென குழம்பியவள் பணத்தை மேசை மீது வைத்துவிட்டு வாசல் நோக்கி நடந்தாள். சித்தார்த்தன் மயிலிடம் வாங்கிய இறகொன்றை எடுத்துப்பார்த்தான். அதை பார்த்தவுடன் யசோதைக்கு தருவதற்காக வைத்திருந்தான். மீனாட்சி கேட்டதை ஒருமுறை நினைத்துக்கொண்டான். " இவ்வளவு பிரியம் இருக்கும் உன் யசோதாவை ஏன் பிரிய நினைக்கிறாய்." இணைந்தால் பிரியாதிருக்க முடிவெடுத்துக்கொண்டான்.

வாசலுக்கருகே வந்துவிட்டார்கள். திரும்பி நின்று எல்லோரையும் பார்த்தனர் இருவர். வாசல்கதவின் விளிம்பில் தொட்டப்படி சித்தார்த்தனை பார்த்தாள் நிவி. இடைவிடாது இமைக்கும் கண்களால் சிரித்தான் அவன்.

வாசல்நிலையை தாண்டியாயிற்று. சன்னல் கதவுகள் படீரென மூடிக்கொள்ளுவதும், மரங்கள் விரைத்துக்கொள்ளும் சத்தமும் , மரங்கள் ஒட்டும் பசை வாசமும் நிவியை மீண்டும் தீண்டின. ஒரு நிமிடம் அப்படியே நின்றவள். நடக்கத்துவங்கியபோது தன் விரலை பிடித்திருந்த சித்தார்த்தன் பிடி இலகியயிருப்பதை உணர்ந்து அவனைப்பார்க்க சித்தார்த்தன் பொம்மையாயிருந்தான்.

Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 11:48 PM 0 COMMENTS

Monday, October 10, 2011

கழுமரம்.


.06 கணுமுடிவில்
கூர் என்று ஏற்றிவிட்டார்கள்
அவர்களை..

அதற்கு முன்
இருநிறங்களால் கோடுகள் வரைந்திருந்தனர்
அவர்கள் உடல்களின்மீது

விழிநீரில் கலந்த
வியர்வை வீச்சத்தை அமுக்க‌
மல்லிகை வாசம் அப்பியிருந்தனர்

முதலில் உந்தி தள்ளப்பட்டவள்
சூல்கொண்ட பெண்

அவர்களில் ஒருவன்
அப்போதுதான் மீசை அரும்பியவன்

பசித்து களைத்த கைகுழந்தை
வ‌தைவாங்கி களைத்த‌ கண‌வ‌ன்
இருவ‌ரையும் தேற்றுவ‌த‌ற்கு ச‌க்தியற்ற‌ பெண்

மல்லிகையை மீறி‌
உப்புச‌ காற்றின் அற‌ம் வீச‌
சில‌ர் உதிர்க்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்
சில‌ர் ம‌ர‌த்தின் அடியில் வில‌ங்கோடு

க‌ணுக்க‌ள் ப‌ல‌ க‌ட‌ந்தும்
தென்ப‌டாத‌தால் கூர் இல்லையென‌
மூவ‌ரும் ஆசுவாசிக்க‌

21 ம் க‌ணுமுடிவில் கூர் என்று
ஓலை வ‌ந்திருக்கிற‌து

எல்லோருமே காத்திருக்கின்ற‌ன‌ர்
க‌ழும‌ர‌த்தின்
எடைக்கு எடை வெங்காய‌ம் த‌ருவ‌தாக‌
கூவுகிற‌வ‌னின் குர‌லுக்காக‌..

Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 8:22 AM 0 COMMENTS

Wednesday, June 22, 2011

சுற்றுலா தேசம் கவிதை ஆங்கிலத்தில்..


ஆனந்த விகடனில் வெளிவந்த எனது சுற்றுலா தேசம் கவிதையை கார்த்திக் என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பதை இன்றுதால் பார்த்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் கூடுதல் மகிழ்ச்சி.

ITS INDEED A TOURIST LAND

Translated from Vishnupuram Saravanan's tamil poem, published in Ananda Vikatan:

You please walk!

Its the same street
Where you walk now
Witnessed a child died of crying
Without his mother and
Without half of his scalp.

You please walk!

Its the same building
Which you see is
Where a women liberator
Was devoured by four-five men
Without language barrier.

You please walk!

Its the same beach
Where you dip your leg
With cool smooth beautiful water
Where a nine month pregnant
While trying to escape by boat
Was shot and killed.

You please walk!

Its the same trench
Where a liberator stood
With his six month old son
Withered by the shelling.

You please walk!

Its the same place
Where you rest now
When once a refuge camp
Witnessed a old man die
Waiting in line for
Water and fishing net.

You please walk!

Tomorrow we can go to another spot.

Yes!
We are now free
To visit any part of this country.

Its a tourist land.

But
To show you around and tell
I am left with just these kind of stories

And
I am helpless about it.

.
நன்றி:http://nvkarthik.blogspot.com/2011/05/its-indeed-tourist-land.html

Labels:

Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 9:13 AM 1 COMMENTS