நள்ளிரவு காற்று...

விஷ்ணுபுரம் சரவணன்

Wednesday, October 27, 2010

கோமாளிகள் கொன்றொழிக்கப்பட்ட உலகத்திலிருந்து..

தஞ்சையில் தமிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம் ஏற்பாட்டில் நிகழ்ந்த முருகபூபதியின் "மிருகவிதூஷகம்" நாடகத்தை பார்க்கும் வாய்ப்புகிடைத்தது.

ஒரு செய்தியாளனுக்கும் கலைஞனுக்கும் என்ன வித்தியாசம்: ஒரு செய்திக்கும் ஒரு கவிதைக்கும் என்ன வித்தியாசம். ஒரு நிகழ்வை சொற்களாக்கி தருவது செய்தியாளன் வேலை. அந்நிக்ழவை வாசிப்பவனின் அனுபவமாக்குவதே கலைஞனின் பணி. அந்நிகழ்வு தனக்கானதாக மாற்றும் மாயத்தைதான் கலைஞன் செய்கிறான். கலை செய்கிறது. அதற்கான உத்திகளாக பலரும் தனக்கான முறையில் தொடர்கின்றனர். சமகால பிரச்சினைகளை கலையாக்கும் முயற்சியில் அக்கலைஞன் எதிர்க்கொள்ளவேண்டிய பிரக்ஞை பூர்வமூகமாகவும் அரசியல் ரீதியாகவும் சவால்கள் ஏராளம். அச்சூழல் வேறுவேறு சொற்களால் பார்வையாளனை பலவகையில் சென்றடைந்தாலும் அவை அவனை புறவகை செயல்பாட்டுத்தளத்திலேயே வைத்திருக்கும் நிலையையே அது செய்திருக்கும். அவனின் அகவய செயற்பாட்டிற்கான காரணியாக வேண்டிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய பொருப்பு கலைஞனுக்கு இருக்கிறது. அந்த பொருப்பை நேர்மையாக உணர்ந்து அதை நாடகபிரதியாக்கியிருக்கிறார் ச.முருகபூபதி.

போர்கள் மூலம் அரசு எனும் குவிமைய அதிகார அமைப்பு வெகுஇயல்பான வாழ்வுமுறையில் இயங்கும் மனிதர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையின் பலவடிவங்களை காட்சிபடிமங்களாக கதைப்பின்னலில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்காமல் மனப்பிறழ்ந்த மனநிலையாளனின் நினைவுக்குறிப்புகளை போல நாடகம் காட்சி காட்சியாக போய்க்கொண்டேயிருக்கிறது. பொருளாதப்போர், குறிப்பிட்ட இனத்தின் மீதான போர் வனத்தின் மீதான போருக்கு தடையாக இருக்கும் வனவாசிகள் மீதான போர், நகரமயமாக்கல் போர் , விளிம்புநிலை மாதர்கள் மீதான ஒடுக்குமுறை போர், என விரிவடையும் அதன் வகைகளை விடவும் போருக்கு பின்னான சூழலில் வசிக்கவேண்டிய [ வாழ அல்ல] மனிதர்கள் எதிர்க்கொள்ளும் மனநிலையையும் வசிப்புசூழல் இடர்பாடுகளையும் நாடகம் கவிதைக்கான நேர்த்தியோடு பேசுகிறது.

போருக்கு பிறகு சிறையென்று சொல்லப்படாத முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்கள் பற்றி காட்சியில் நடிகள் மிருகத்தலை முகமூடியணிந்தும் மிருகத்தின் நகர்தல் போல நடித்தும் முகாம்களில் நடத்தப்படுவதை பார்வையாளனுக்கு மிகநெருக்கத்தில் கொண்டுச்சென்றனர். இதை இன்றைய ஈழமக்கள் துயரோடு பொருத்தி பார்த்து ஆத்துப்போனார்கள். பறிக்கப்பட்ட தங்கள் வனத்தை தொலைத்த மக்களின் கனவுகள் குறித்தும், கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து நகரத்தின் ரயிலடி ஓரங்களிலும், சாக்கடை மூடிகள் மீதும் குடியிருக்கும் மக்களை துரத்தும் அரசும், இழந்துப்போன தங்கள் வாழ்வு பற்றிய புலம்பலும் இன்னும் உறுத்திக்கொண்டேயிருக்கின்றன.

பலவித மயமாக்கலால் தங்களது பண்பாடு அழிக்கப்பட்டுபோனதை/போவதை பெரும் ஓலத்தோடு சொல்லப்படுவதாக ஒருகாட்சி. கள் குடிக்கப்போன தன் தாத்தன் கொல்லப்பட்டதையும் இன்றும் அவன் கள் வேண்டி அலைவதான காட்சியில் நடிகளின் நடிப்பும் உரையாடலும் உச்சத்திலிருந்தன.

பொம்மைகள் குழந்தைகளுக்கான காத்திருக்கின்றன என வரும் வித்யா இந்த உலகம் யாருக்கானதாக இல்லை என்பதை சொல்வதும், நாடகம் துவங்கி முடியும் வரை தன் பாட்டன் பாடலை பாடும் கோமாளி இடையிடையே வருவதும் வேறொன்றை நமக்கு உணர்த்துக்கின்றன.

போரும் படுகாயங்களும் சுமந்துவரும் இந்த நாட்களே முருகபூபதியை இவ்வகையான நாடகத்தை எழுத தூண்டியிருக்கின்றன. நாடகத்தின் உரையாடல் நடிகர்களிடையே அல்லாமல் நடிகர்களும் பார்வையாளனுக்குமான கவித்துவ தொடர்களால் நிறைந்திருந்தன்,

நாடகம் துவங்குமுன் தோழி லிவிங் ஸ்மைல் வித்யாவோடு பேசிக்கொண்டிருக்கையில் ரொம்பவும் எதிர்ப்பார்க்காதே.. முடிந்தைதான் செய்வேன்.. ஆனாலும் நல்லா செய்தேன் என சொல்வதற்கு தயாரா இரு.. என சொல்லியிருந்தார். வித்யாவின் நடிப்பைபற்றி நான் சொல்வதைவிடவும் நாடகத்துறை முன்னாள் பேராசிரியரும் முருகபூபதியில் ஆசிரியருமான ராமானுஜம் சொன்னதை இங்கு பதிவதே சரியாக இருக்கும்.

" வித்யா.. நாடகத்தில் உன்னை ஒப்புக்கொடுத்திட்டே"

மேலும் நாடகம் பற்றி அவர் சொன்னதை நானும் நண்பர் கண்ணகனும் சிலாகித்துக்கேட்டோம்.

நாடகம் என்பது உடலை மொழியாக்குவது : மொழியில் ஆகச்சிறந்தது கவிதை: இங்கு அந்த உடல்மொழி கவிதை மொழியாக இருந்தது.

[ இந்நாடக அனுபவம் குறித்து வேறு விதமாக எழுத ஆரம்பித்து நேரம் என்னை எதிரியாக்கிவிட்டதால் எப்படியோ ஒருவழியாக பசுவை மரத்தில் கட்டிவிட்டேன்]

Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 9:00 AM 0 COMMENTS

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home