நள்ளிரவு காற்று...
விஷ்ணுபுரம் சரவணன்
Wednesday, January 5, 2011
ஆசிர்வதிக்கப்பட்ட இருக்கை.

ஜனவரி மாத உயிர் எழுத்து இதழில் வெளிவந்த என் கவிதைகள்..
ஆசிர்வதிக்கப்பட்ட இருக்கை
இப்போது நானமர்ந்திருக்கும்
இப்பேருந்து இருக்கை ஆசிர்வதிக்கப்பட்டது
சிறுமி ஒருத்தி கையளித்ததால்
நானமர
எழுந்தவளின் ஆடை
இறகொன்றின் வடிவத்தை ஒத்திருந்தது
படிகளில் இறங்கும் முன்
திரும்பி மெல்ல உதட்டசைத்தாள்
அந்த சிரிப்பு பேருந்தை நிரப்பி
தொங்கி கொண்டிருப்பவர்களின்
உதடுகளில் தொற்றிக்கொண்டது
கூர்மையான முகங்கொண்டிருந்தவளுக்கு
என் மகளின் பெயரைச்சூட்டிக்கொண்டேன்
அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்
வழித்துணைக்கு முன்னிருக்கைப்பெண்ணின்
மல்லிகை வாசத்தை
சேகரித்து வைத்திருந்தாள் கூடவே
சின்னஞ்சிறிய மலர்காம்புகளையும்
எனக்கருகே அமரும் முன்வழுக்கை மனிதர் மீது
நான் பெரும்விருப்பு கொள்கிறேன்
ஆயினும்
அவ்விருக்கையில் அமர்ந்திருந்த
அம்மா மீது அவள் கொண்ட விருப்பை அது ஒத்திருக்காது
அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்
படித்துறையற்ற குளம்
வளைவுப்பாலத்தில் பறவைகள் இரண்டு
அடர்நீலநிற உடையில் கடந்துபோகும் பெண்கள்
எனக்கான சன்னலோர காட்சிகளையும்
அவள் தேர்ந்தெடுத்திருந்தாள்.
அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்
மலரற்ற மல்லிகை காம்புகளை
நீலஉடுப்புப் பெண்களுக்கு சூட்டினேன்..
கைகளிளள்ளிய குளத்து நீரை
பாலத்துப்பறவைக்களுக்க் பருகத்தந்தேன்..
எதிர்வந்த யானையில் வழியே
விழிகளில் பால்யத்தை சுமந்த
முன்வழுக்கை மனிதருக்கு
இன்றிரவு கனவில் யானைச்சவாரி பரிசளித்தேன்
அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்
அவள் சிரிப்பை பத்திரப்படுத்தியவர்கள்
இறங்க,இறங்க
பேருந்திற்குள் கற்றாழை வாசமடிக்கத்துவங்குகிறது
ஓட்டுநரின் சுரமற்ற ஓட்டுதலில்
கற்றாழை வாசம் வழிந்தோடுகிறது
நிறுத்தமிடங்களிலெல்லாம்
எல்லோரும் தங்கள் உடலை
முகர்ந்துபார்த்துக்கொள்கிறார்கள்..
அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்
மருதாணி கிணற்றருகே
பேருந்து நிறுத்திய ஓட்டுநர்
நீரளளி முகத்தில் அறைந்துகொள்ள
கற்றாழை வாசம் கிணற்றை சூழ்ந்துக்கொள்கிறது..
அவள் சிரிப்பை நேசித்தவர்கள்
இறங்க,இறங்க..
கற்றாழை வாசம்
கரையான் புற்றைப்போல பெருக
படிகளில் தொங்குவோர்
தங்கள் கைகள் இற்றுப்போய்விடுமோவென
அடிக்கடி பார்த்துக்கொள்கின்றனர்
பேருந்து கவிழ்க்கபடாதிருக்க
நான் இறங்காமலிருக்கவேண்டியிருந்தது
அடுத்தது
என் நிறுத்தம்..
அவளிறங்குமுன்பேருந்தையெடுத்துவிட்டார்கள்
குதித்தவள் விழுந்துவிட்டாள்
பதறும் அம்மாவிடம்
ஒன்றுமில்லை என்பதாக வேகமாய் நடக்கிறாள்
வலதுகாலின் தயக்கம்
எனக்கும் அவளுக்கும் மாத்திரமே அப்போது தெரியும்
அவள் இந்நேரம் வீட்டிற்கு போயிருப்பாள்
நன்றாக விளையாடிக்கொண்டிருப்பாள்
நீங்களும் நம்புங்கள்
இந்த கவிதை
அவள் ஆசிர்வதித்து கையளித்தது.
பேருந்து போய்க்கொண்டிருக்கிறது
சாலையைக் கடந்து..
#####
விசித்திர கால்குலேட்டர்.
================================
அவள் அந்த கால்குலேட்டரை
நேற்று மாலையிலிருந்து வைத்திருக்கிறாள்.
அவள் கணக்கிடுவதற்கு எந்த கணக்கற்ற நிலையிலிலும்
எண்களை கூட்டி பெருக்குகிறாள்.
எண்கள் எதையே நினைவூட்டுகின்றன..
எதையோ மறக்கச்செய்கின்றன.
ஏதோ ஒரு கணத்திலிருந்து கால்குலேட்டர் எடையற்றதாகிவிடுகிறது
பதினைந்தை நூறால் பெருக்க திரையில்
தையில் போடும் வயோதியக மருத்துவரின் முகம் தெரிய மிரண்டுப்போனாள்.
பத்தை அதாலேயே பெருக்க
மருந்துவாசமும் மூத்திரநெடியும் தாக்கின..
ஆயிரத்தை ஐநூறால் வகுக்க
பால் கட்டிய முலைகள் வலித்தன
ஆறு ஒன்பது நான்கு சுழியத்தில் முன்னூறை கழிக்க
துணையின்றி கழிவறை செல்ல விரும்பினாள்
எட்டை அழுத்தியபோது
பசித்தது
இரண்டை இரண்டோடு கூட்டி,
கூட்டி
கூட்டி
கூட்டி
தொடர் கூட்டலை விளையாட்டக்கிக்கொண்டிருந்தவளை
தாதி கையை அசைக்கூடாதென சொல்லி
பாட்டிலிருந்து இறங்கும் சொட்டுக்களை அதிகப்படுத்தினாள்.
பத்தொன்பதோடு ஐந்தை கூட்ட கழுத்திற்கு கீழ் மறத்துப்போனது.
எதிலிருந்தோ எதையோ கழிக்க அது மைனஸ் பத்தாகியது
குழந்தையொன்று அழுகிறது பக்கத்தறையிலிருந்து
ஒன்றையும் ஒன்றையும் பெருக்க
வயிற்று தையலில் ஏதோ ஊறியது..
கால்குலேட்டர் மீணடும் கணத்துப்போனது.
###
பச்சைநிற நாய்.
பச்சைநிற நாயை
மீண்டும் பொம்மையாக்கிவிட்டு
கண்களை மட்டும் விளையாடவிட்டு
கைகளை குறுக்கே கட்டி
'சமர்த்தாக'அமர்ந்திருப்பாள் நிவி
'பூனை வந்திட்டிருக்கு'
மிரட்டலில் அஞ்சி
பிறகொருநாள்
பொருள்கைநழுவும் பிரஞ்சையற்று நின்றேன்
கரும்பழுப்புநிற பூனையொன்றுக்கு
சோற்றுப்பருக்கைகள் திண்ணத்தந்து
அதனை தடவிகொடுக்கும்
நிவியை கண்டு..
ஆனபோதும்
அதற்கடுத்த நாளிலும்
பூனை வந்திட்டிருக்கு
மிரட்டலுக்கு
சமர்த்தாக அமர்ந்தாள் நிவி
####\
கடத்தல்.
நீங்கள் நினைப்பதுபோல
அத்தனை எளிதன்று
ஒரு குழந்தையை கடத்திச்செல்வது..
வன்மம் தழும்பும் மனநிலையோடும்
இறுக்கம் கப்பிய முககுறிகளோடும்
வலக்கையில் கூரிய அல்லது வெடிக்க காத்திருக்கும் ஆயுதத்தோடும்
மறுக்கையில்
கண்ணாடிப்பாத்திரத்தில் பெயர் பொறிப்பவனின்
கவனத்தோடு
ஒரு குழந்தையை கடத்திசெல்வது
நிங்கள் நினைப்பதுபோல எளிதன்று.
[தே.எ. கோவர்த்தனிக்கு..]
###
Labels: உயிர் எழுத்து ..
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 7:12 AM 2 COMMENTS
2 Comments:
அன்பு நண்பருக்கு முதலில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்,
மிக சிறப்பான கவிதை, மழலைகள் மீதான ஈர்ப்பு வியக்க வைக்கிறது,
இன்னும் வெகுஜன மக்கள் விரும்பும் கவிதைகளையும் எழுத விழைகிறேன்.
அன்புடன்,
கி. முருகவேல்
உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி முருகவேல்.
உங்களின் கருத்தை கவனத்தில் கொள்கிறேன்.
நன்றி..
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home