நள்ளிரவு காற்று...

விஷ்ணுபுரம் சரவணன்

Tuesday, April 19, 2011

டென்ட்டிஸ்டுக‌ள் ஏன் ப‌ல்துல‌க்குவ‌தில்லை?


ஆராதன்
அற அகராதி ஒன்றை வைத்திருக்கிறான்

அதன் முகப்பு அட்டையில்
அடர்காவிநிற பின்னனியில்
மேலாடை விலக்கிய தலைவரின் படமும்
பின்னட்டையில் அதே பின்நிறத்தில்
தலைவரின் உடல்நிறத்தில்
சில வரிகளும் அச்சிடப்பட்டிருந்தன‌
ஆராத‌ன்
மெல்லிய‌ க‌ருப்பு கோடால்
பின்நிற‌த்திற்கும் த‌லைவ‌ருக்கும் இடைவெளி த‌ர‌ நினைத்தான்

அவ்வ‌க‌ராதியை எப்போதாவதுதான் புர‌ட்டுவான்
ஒன்றைத்தான் எல்லாப்ப‌க்க‌ங்க‌ளிலும்
எழுதியிருக்கிறார்க‌ள் என்று அவ‌னுக்கு தெரியும்

அற‌ அக‌ராதியின் வாச‌ம்
ப‌ழைய‌காகித‌த்தின் வாச‌ம் போலிருக்காது
வ‌ழித்த‌வ‌றிய‌ அர‌சிய‌ல்வாதியின் அக்குள் நெடியை ஒத்திருக்கும்

இடையிடையே பெண்கள் நிர்வாணமாக
நீந்தவைக்கப்பட்டிருந்தாலும்
அது பூஜைக்குரிய‌தாக‌ ச‌த்திய‌ம் செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

புதிதாக‌ நீதி க‌தைக‌ள் தேவைப்ப‌டுவோர்
அவ‌னிட‌மிருந்து அக‌ராதியை
இர‌வ‌ல் வாங்கிச்செல்வர்
எப்போதும் அற‌அக‌ராதியுட‌னே காட்சி தரும் அவன்
எதிரொலிக‌ளை விரும்பினாலும்
அக‌ராதி த‌விர்க்க‌சொல்வ‌தால் அரைம‌ன‌த்தோடு க‌டந்துவிடுவான்

அக‌ராதி திற‌ந்திருந்தாலும்
க‌ண்மூடியே உப‌தேசிப்ப‌து வ‌ழ‌க்க‌ம்
ம‌று அல்ல‌து முன் ஜென்ம‌ம் ப‌ற்றிய
க‌ன‌வுக‌ளை மித‌க்க‌விடுகையில்
அவன் கண்கள் மஞ்சள் நிறத்தில் ஜொலிப்பதாக‌ பலர் சொலவதுண்டு

ர‌த்த‌த்திற்கான மாற்றை விளக்கும் கணங்களில்
அவ‌ன் நாக்குக‌ள் உல‌ர்ந்துவிடுகின்ற‌ன‌

மொழியையும் மனிதர்களை கடந்த புத்தகம் என
உபதேசிக்கும் பொழுதுகளில் இடைம‌றிக்கும்
தூரதேச சிக்கல்களுக்கு குரானைபோல
வலமிருந்து இடம் புரட்டி நீதி சொல்வான்

அவ‌னுக்கு உற‌க்கம் வ‌ராத‌ இர‌வுக‌ளில்
எவ்வித‌ த‌ய‌க்க‌முமின்றி
தலையணையாக்கி கொள்வான் அக‌ராதியை

நள்ளிரவில் கண்விழிக்கும் கள்ளப்பேனா ஒன்றிருக்கிறது
அவன் விரும்பும் திருந்தங்களை
அகராதியில் செய்துவிடும் உத்தரவின்றியும்கூட

ஆராத‌ன்
ப‌ல்துல‌க்க‌வும்
உண்ப‌த‌ற்கும்
அல‌ங்க‌ரித்துகொள்வ‌த‌ற்கும்
புண‌ர்வ‌த‌ற்கும்
பயணிப்பதற்கும்
உயிர்வாழ்வ‌த‌ற்கும்
இடையே அற‌அக‌ராதி வ‌ருவ‌தை என்றுமே அனும‌தித்த‌தில்லை.



.

Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 4:46 AM 1 COMMENTS

1 Comments:

அறம் உடைத்தல்கூட பின் நவீனத்துவத்தின் நல்ல கூறுதான்.அடித்து அடித்துச் சொல்லித் தரப் பட்ட தேவையற்ற அறங்களில் முடிந்தவற்றை உங்களின் வசீகரிக்கும் எதிர் சொற்களால் கட்டுடைக்க வேண்டுமென இரு கை ஏந்தி தவமிருப்பவர்களில் நானும் ஒருவன்.

April 19, 2011 6:48 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home